தமிழ் தூது - Tamil thoothu
'பாவே ! நூலே ! கலையே ! புலவர்களுடைய உள்ளம் கருகாது சொல் விளையும் செய்யுளே ! வெண்பா முதலாக மருட்பா இறுதியாக உள்ள 5 குலங்களாய் நீ வந்தாய் ! கொப்பூழில் உதான வாயு தரித்து; வாக்கு ஆகிய கருப்பத்தை அடைந்து; தலை, கழுத்து, நெஞ்சு ஆகிய இடங்களைச் சார்ந்து; நாக்கு, பல், மேல் வாய் ஆகியவற்றில் உருவாகி; முதல் எழுத்துகள் முப்பதும், சார்பெழுத்துகள் இருநூற்று நாற்பதுமாய்ப் பிறந்தாய்”.
சிந்தாமணியாய் உள்ள உன்னைச் சிந்து என்று கூறிய நாக்கு சிந்தும். (சிந்தாமணி = ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. சிந்து = சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.) உலகில் வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை என்ற 5 நிறங்கள் உண்டு. ஆனால் உனக்கு நூறு (பா) வண்ணங்கள் உண்டு. கைப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு, இனிப்பு என்ற ஆறுவகைச் சுவைகள் (ரசம்) உண்டு. ஆனால் உனக்கு வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், நகை, நடுவுநிலை, உருத்திரம் என்ற 9 வகைச் சுவைகள் உண்டு.
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பால்களுடன் ஆண்பால், பெண்பால் என்ற இரண்டு பால்களும் சேர்ந்து உனக்கு ஐந்து பால்கள் உண்டு.