பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அருப்புக்கோட்டைக்கு அருகில் இராமநாதபுரம் செல்லும் வழியில், 15 கி. மீ தொலைவில் உள்ள திருச்சுழி என்ற திருத்தலத்தில் 1879 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் நாள் அவதரித்தார். வேங்கடரமணன் என்ற திருநாமம் தாங்கிய பகவான், தன் பதினாராம் வயதில் ஆன்மீக ஞானத்தால் உந்தப்பட்டு அப்பன் அருணாசலேஸ்வரரை தரிசிக்க திருவண்ணாமலைக்குச் சென்று அங்கேயே தங்கி விட்டார். அருணாசலேஸ்வரர் அருளால் ஆத்மசாட்சாத்காரம் அடைந்து, சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக, ஆன்மீக தாகம் கொண்டு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு, ஞானவழி காட்டி அருளியுள்ளார். பகவான் தன்சீடர்களுடனும்,பக்தர்களுடனும் நிகழ்த்திய ஆன்மிக உரையாடலை, ரமண பக்தர்களுக்கு உதவும் பொருட்டு, திருச்சுழி, ஸ்ரீஸ்ரீசத்தியானந்த மகராஜ் ( மௌன சுவாமிகள்) அவர்களும், அவருடைய பக்தர்கள் Dr.சம்பத்,Dr.தாமோதரக்கண்ணன் ஆகியோர் தொகுத்து, "ரமண விவிலியம்" என்ற புத்தக வடிவில் வெளியுட்டுள்ளார்கள். அந்த அரிய ஆன்மிக நூலிலிருந்து, "தினசரி ரமண தியானம்" என்ற தலைப்பில் ஆன்மீக அன்பர்களுக்கு பகவான் அருளால், 'பகவான் ஸ்ரீரமண பக்திஞான இயக்கம்' திருநெல்வேலி, சார்பாக வழங்குகிறோம்